அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது - சம்பிக்க!

அடிப்படைவாத கொள்கையுடையஅமைப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது என அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் அடிப்படைவாத கொள்கையுடைய பல அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்தது.
ஆனால் அண்மையில் ஒரு சில அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்களை அலட்சியப்படுத்த கூடாது. அரசியல் வேறு தேசிய பாதுகாப்பு வேறு என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசுக்குள் அரசு தற்போது தோற்றம் பெற்றுள்ளது. யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும், எந்த கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்பதை அரசுக்குள் அரசாக செயற்படும் தரப்பினர் தீர்மானிக்கிறார்கள்.
மோசடியான தரப்பினர் முன்னிலையில் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காது.எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் ஊடாக நாட்டு மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்” எனக் கூறியுள்ளார்.