சர்வதேச நாணய நிதியத்துடனான கடனை மறுசீரமைப்பதற்கு கோரிக்கை!

#SriLanka #IMF
Mayoorikka
1 hour ago
சர்வதேச நாணய நிதியத்துடனான கடனை மறுசீரமைப்பதற்கு கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் ஒட்டுமொத்த நாடும் மிகமோசமான தாக்கங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், இப்பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 38 சிவில் சமூக அமைப்புக்களும், 73 மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

 இதுகுறித்து அடையாளம் கொள்கை ஆய்வு நிலையம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், சட்ட மற்றும் சமூக நிதியம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உள்ளிட்ட 38 சிவில் அமைப்புக்களும் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், பிரிட்டோ பெர்னாண்டோ, ஏர்மிஸா ரீகல், லயனல் போபகே, ரூக்கி பெர்னாண்டோ உள்ளடங்கலாக 73 மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகளும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

 அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளி நாடளாவிய ரீதியில் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வனர்த்தத்தில் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

 அதுமாத்திரமன்றி பெருமளவான சொத்துக்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்வாதாரம் என்பன வெகுவாக சேதமடைந்துள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 35 பில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கை போன்ற நாடுகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கத்தின் தீவிரத்தன்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

 நாட்டுமக்களில் பெரும்பான்மையானோர் மிக உயர்வான வரி அறவீடுகள், சலுகை நிறுத்தங்கள், போதிய சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்துக்குள் இலங்கை சிறைப்பட்டிருக்கின்றது.

 சர்வதேச நாணய நிதியமானது அரசாங்கத்தின் செலவினங்களை மட்டுப்படுத்துகின்றது. அதன்விளைவாக தற்போதைய மனிதாபிமான நெருக்கடி நிலையின்போது அவசியமான செலவினங்களை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் இயலுமை மாத்திரமன்றி, உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு இசைவாக்கமடைதல் என்பனவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 அதேவேளை 'தித்வா' சூறாவளியானது கட்டமைப்பு ரீதியாக நிகழும் காலநிலைசார் அநீதியைக் காண்பிக்கின்றது. உலகளாவிய ரீதியில் நிகழும் காபன் வெளியேற்றத்தில் இலங்கையின் பங்களிப்பு வெறும் 0.08 சதவீதம் மாத்திரமேயாகும். இருப்பினும் வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் மண்சரிவு போன்ற காலநிலை மாற்ற அனர்த்தங்களினால் இலங்கை மிகமோசமான தாக்கத்துக்கு முகங்கொடுக்கின்றது.

 நிறைபேறான தன்மையற்ற அபிவிருத்தித்திட்டங்கள், கைத்தொழில்மயமாக்கம், அதன்விளைவாக அதிகரித்துவரும் காடழிப்பு, மணல் அகழ்வு, வளிமண்டலவியல் சமநிலையின்மை உள்ளிட்ட பல விடயங்கள் இலங்கை முகங்கொடுத்துவரும் தாக்கங்களுக்கு முக்கிய காரணங்களாகும். இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட ஒப்பந்தத்தை மறுசீரமைக்குமாறும், அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்களை தனியார்மயப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்துகின்றோம்.

 அதேபோன்று இலங்கை மத்திய வங்கி தொடர்பில் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதன் ஊடாக அதன் இறையாண்மையை மீட்டெடுத்தல், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பொதுக்கணக்காய்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கூட்டறிக்கையில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!