இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளிகளுக்கும் சர்வதேச விசாரணை வேண்டும்!

#SriLanka #Investigation #Tamilnews #sri lanka tamil news #Mullivaikkal
Mayoorikka
8 months ago
இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சனல் 4  வெளியிட்ட காணொளிகளுக்கும்  சர்வதேச விசாரணை வேண்டும்!

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன அழிப்பு, இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளிகளும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 நாட்டின் புலனாய்வு பிரிவு ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றால் போன்று செயற்படுவதனாலேயே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை அனைவரும் கோர வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலின் பின்னணி என்ன? ஏன் உண்மைகள் கண்டறியப்படவில்லை என்பது தற்போது கேள்வியாகவுள்ளது. 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக பதவியேற்று குழப்பத்தை ஏற்படுத்தினார். இதன்பின்னர் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது போனதால் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே வந்தது.

 அன்று பெரும்பான்மையை நிரூபித்து இருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது என்பது எனது கருத்தாக உள்ளது. எப்படியாவது இந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குண்டுதாக்குதலின் சூத்திரதாரியாக மாறியிருக்கலாம்.

 கோத்தாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறும் போது இவர் எந்த விதத்திலும் பொருத்தமானவர் அல்ல என்பதனை கூறியிருந்தேன். தாக்குதலின் பின்னர் மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்பட்ட நேரத்தில் அவர்கள் தாம் அச்சம் இன்றி மக்கள் வாழும் நிலைமையை எற்படுத்துவோம் என்று கூறினர்.

 இதன்படி ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் நடந்த தாக்குதல்தான் இது. இதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வவுனதீவில் நடந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டனர்.

 ஆனால் அதனை உண்மையில் யார் செய்தனர் என்பதனை அனைவரும் புரிந்துகொண்டள்ளனர். தங்களின் அரசியல் காரணங்களுக்காக தாக்குதல்களை ஏற்பாடு செய்துள்ளனர். 

அதன்படி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் மூலமே கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகினார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டுமென்று பாராளுமன்றத்தில் கதைக்கப்படுகின்றது.

 இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்றால் போன்று புலனாய்வாளர்கள் செயற்படுவதனாலேயே சர்வதேச விசாரணையை கோர வேண்டியுள்ளது.

 இவர்கள் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் தான் இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்.

 அதேபோன்று சனல் 4 - 2009 இல் வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் அவசியமாகும்.தேசிய மட்டத்தில் நீதி கிடைக்காத காரணத்தினால் தான் நாங்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைகளை கோருகிறோம் என்றார்.