அபாயகர வெள்ள நிலைமை! தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறுங்கள்
இலங்கையின் ஆறு முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் 'அபாயகர வெள்ள நிலைமை' உருவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த ஆறுகளுக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்கள், தற்போது நிலவும் அதி தீவிர வெள்ள நிலைமையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆறுகளின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தாமதமின்றி, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் இந்த பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீரேந்துப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மழை நிலைமை, களனி கங்கையின் மேல் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கை ஆற்றுப்படுகைக்குள் பராமரிக்கப்படும் ஆற்று நீர் அளவீடுகளின் நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன
(வீடியோ இங்கே )
அனுசரணை
