கடைசி குண்டு, கடைசி வீரர் இருக்கும் வரை போராடுவோம் - இந்தியாவிடம் சோகத்தை வெளிப்படுத்திய ஈரான்
இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே, டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தனது நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழல் குறித்து மிகவும் உருக்கமாகவும் தீர்க்கமாகவும் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திட்டமிட்ட ஆக்கிரமிப்பை நடத்தி வருவதாகவும், ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை விளைவிக்க அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
நாம் இப்போது உரையாடிக் கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட, ஈரானின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆக்கிரமிப்பு நடத்தும் எதிரிகளுக்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவதே ஈரானின் தற்போதைய முதன்மை நோக்கம் என்றார்.
மேலும், இது ஈரானியர்களின் வீரம் மற்றும் தேசிய கௌரவம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்று குறிப்பிட்ட அமைச்சர், தங்கள் நாட்டைப் பாதுகாக்க கடைசி குண்டு தீரும் வரையிலும், கடைசி வீரர் உள்ள வரையிலும் எதிர்த்துப் போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை எனத் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் இந்த கொடூரங்களை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
(வீடியோ இங்கே )