மலேசியாவில் புதிய வகை கொரோனா : ஆறாயிரம் மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.
பாடசாலைகளில் இந்தக் காய்ச்சல் பரவல், ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 4 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் இறுதி பரீட்சை எழுத உள்ள நிலையில், இந்த திடீர் தொற்று அதிகரிப்பு மாணவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



