மீண்டும், மீண்டும் சிங்கள அரசியல் தலைவர்கள் தவறு இழைக்கிறார்கள்!
1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பில் இருந்து இன்றைய அரசியல் யாப்பு வரையும், சிங்கள பௌத்த சமயத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான், இலங்கைத்தீவு இன்று எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரண - காரியம் என்ற உண்மையை இவர்கள் எப்போது சிங்கள மக்கள் முன்னிலையில் துணிந்து சொல்லப் போகின்றனர்?
ஆனால் - இது தான் உண்மை என்பதை ஏற்கவோ நம்பவோ எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவர்களும் தயாராக இல்லை. இடதுசாரி - மாக்சியம் என்று சொல்லிக் கொண்டு வந்த அநுரகுமார திஸாநாயக்கா கூட பௌத்த பீடத்தை மீறி செயற்படும் நிலையில் இல்லை என்பதும் தற்போது அம்பலப்பட்டுள்ளது.
1980 களில் இருந்து அதாவது, போர்க்காலத்தில் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் தமிழ் இனவாதம் எனவும் முத்திரை குத்தி, சர்வதேச நாடுகளுக்கு இல்லாத பொல்லாத கதைகள் கூறி, 2009 இல் போரில் அனைத்தையும் இல்லாது ஒழித்தார்கள்.
அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்ச குடும்பம் மீது குற்றம் சுமத்தி, தமிழர்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட அத்தனை இன அழிப்பு திட்டங்களையும் மூடி மறைத்தார்கள். இப்போது 'டித்வா ' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அநுரகுமார திஸாநாயக்க மீது பழிசுமத்தி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற சிங்கள எதிர்க்கட்சிகள் முரண்பாட்டில் உடன்பாடாக ஒன்று சேர்கின்றன. 'டித்வா' புயல் பாதிப்புகளை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆகவே - சந்திரிகா, ரணில், மகிந்த, அநுர போன்ற சிங்களத் தலைவர்கள் உலகத்துக்கும் சிங்கள மக்களுக்கும் மூடி மறைக்கும் உண்மை எது என்று இப்போது புரிகிறதல்லவா? 2004 இல் சுனாமி அழிவுகளை மீளக் கட்டியெழுப்ப பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முற்பட்டபோது ஜேவிபி அதனை தடுத்து நிறுத்தியது. சுனாமி அவலங்கள் - உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு மத்தியில் கொழும்பில் பெரும் போராட்டத்தை ஜேபிவி நடத்தியிருந்து. மறைமுகமாக சந்திரிகா, ரணில் ஆகியோரும் அப் போராட்டத்தை ஆதரித்திருந்தனர் என்பதே உண்மை.
தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு அரசியல் தீர்வு என்று வரும்போது கொழும்பில் பெரும் அரசியல் குழப்பங்கள் - பொருளாதார நெருக்கடிகள் வந்துவிடும். இப்போது 'டித்வா ' புயலை பயன்படுத்தி இலங்கையின் ஒற்றுமை - இலங்கையின் இறைமை - பொருளாதார முன்னேற்றம் அது இது என்று எத்தனை கதைகளை அநுர அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் அவிழ்த்து விடுகின்றது.
ஆகவே --- 1948 இல் இருந்து தமிழர்களை ஒடுக்குவதற்கு இராணுவ ரீதியான திட்டங்களை தீட்டினார்களே தவிர, ஒட்டுமொத்த இலங்கைத்தீவை முன்னேற்ற எந்தவொரு திட்டங்களையும் சிங்களத் தலைவர்கள் வகுக்கவில்லை என்ற உண்மை இப்போது புலப்படுகிறது அல்லவா? 2009 இற்குப் பின்னர் கூட மாறி மாறி ஆட்சியை கைப்பற்றும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றதே தவிர, இனப்பிரச்சினை என ஒன்று இருக்கிறது, முதலில் அதற்குத் தீர்வை காண வேண்டும் என்ற சிந்தனை எந்த ஒரு சிங்கள தலைவர்களிடமும் இல்லை என்பதும் புரிகிறது அல்லவா? அரசியல் - பொருளாதார முறைமைகளில் தமிழ் முஸ்லிம் மக்களை இணைக்க வேண்டும் என்ற நோக்கம் கூட இல்லை என்பதும் தெரிகிறது அல்லவா? அப்படி இல்லையேல் --- விடயதானத்தோடு தொடர்பு இல்லாத சில தமிழர்களை சும்மா ஒப்பாசாரத்துக்காக இணைப்பார்கள்.
எங்காவது ஒரு தமிழன், சிங்களம் ஆங்கிலம் பேசினால், அவனது பெயரை ஏதாவது ஒரு குழுவில் இணைத்துவிட்டு ஜெனீவாவுக்கு கணக்கு காட்டுவார்கள்.
இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விவகாரங்களில் ஜெனீவா போன்ற சர்வதேச சமூகத்துக்கு பொய்யான கணக்குகளையும், பொய்யான முகங்களையும் காண்பித்து, அதற்கு ஏற்ப பொய்யான அறிக்கைகளையும் தயாரிப்பதில் சிங்கள அரசியல் தலைவர்கள் வல்லவர்கள்.
ஆனால் -- காலத்துக்கு காலம் சர்வதேசத்துக்கு காண்பிக்கத் தயாரிக்கும் பொய்யான அறிக்கைகள், பொய் முக நடவடிக்கைகள் எதுவும், இலங்கைத்தீவின் முன்னேற்றத்திற்கு உதவாது என்ற உண்மையை சிங்கள தலைவர்கள் அனைவரும் உணரும் வரை, பொருளாதார பலவீனம் இலங்கைத்தீவில் தொடர்கதை தான் என்ற உண்மையை இவர்கள் அறியாமல் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் இலங்கைக்கு நிதியுதவி வழங்கி வரும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி பாரிஸ் கிளப் போன்ற அமைப்புகளுக்கும் அமெரிக்க, இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களின் மூடி மறைப்புகள் - திருகுதாளங்கள் தெரியாமலில்லை.
ஆனால் -- புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் அதுவும் இந்து சமுத்திரத்தில் இலங்கை என்ற தளம் இவர்களுக்கு அவசியம் என்பதால், ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை ஒற்றை ஆட்சி அரசு” என்ற கருத்தியலை நியாயப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் --- காலத்துக்கு காலம் ஏதேனும் ஒரு சிங்களத் தலைவர்களை நம்புகின்ற சில தமிழ் தலைவர்கள்--- குறிப்பாக -- சந்திரிகா, ரணில், அநுர போன்ற தலைவர்கள் நல்லவர்கள் என்ற கதைகளை கூறுகின்ற தமிழ்த்தேசிய கட்சிகளும் தமிழர்களின் தற்போதைய தனிமைப்பட்ட நிலைமைகளுக்குப் பிரதான காரணம்.
தேர்தல் அரசியலில் மாத்திரம் தங்கியிருந்து தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்த முடியாது என்பதை பல தடவைகள் இடித்துரைத்து எழுதியிருந்தாலும், தமிழ் கட்சிகளின் நோக்கம் நாடாளுமன்றக் கதிரைகள் மாத்திரமே.
ஆனால் --- தேர்தல் அரசியல் - நாடாளுமன்றக் கதிரைகளை கடந்து இளம் சமூகம் ஜனநாயக வழியில் வியூகங்களை வகுக்கின்ற காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
-நிக்ஸன்-
(வீடியோ இங்கே )
அனுசரணை
