லெகோர்னு மீண்டும் பிரதமரானதால் கொந்தளிக்கும் பிரான்ஸ் எதிர்க்கட்சிகள்

பிரான்சில் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவு, தற்போது அந்த நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
செபாஸ்டியன் லெகோர்னுவை (Sébastien Lecornu) மீண்டும் பிரதமராக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) நியமித்ததற்கு எதிராக, பிரான்சின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இது "மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்" என்றும், "முகத்தில் அறைந்தது போன்ற செயல்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளன.
நேற்று (அக்டோபர் 10) லெகோர்னு நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதால், பிரான்ஸ் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
நிபந்தனை விதிக்கும் சோசலிஸ்ட் கட்சி
லெகோர்னு அரசு நீடிக்க வேண்டுமானால், உடனடியாகச் சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் எனச் சோசலிஸ்ட் கட்சி (PS) எச்சரித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பியர் ஜூவெட் (Pierre Jouvet) கூறுகையில், "பிரதமரின் கொள்கை விளக்க உரையின்போதே, சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்தை முழுமையாக இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.
மக்களின் வாங்கும் திறனைப் பாதுகாக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றும் சட்டப்பிரிவு 49.3-ஐ கைவிட வேண்டும். இவை நிறைவேற்றப்படாவிட்டால், எங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்போம்" என்றார்.
சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவு இந்த அரசுக்கு மிக முக்கியம் என்பதால், இந்த நிபந்தனைகள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
"மக்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்" - இடது சாரிகள் ஆவேசம்
தீவிர இடது சாரிக் கட்சியான La France Insoumise (LFI), இந்த நியமனத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மானுவல் பாம்பார்ட் (Manuel Bompard), "இது அதிகார போதையில் இருக்கும் ஒரு பொறுப்பற்ற தலைவரின் செயல். பிரான்சும் அதன் மக்களும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்," என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், லெகோர்னு அரசுக்கு எதிராக உடனடியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதுடன், அதிபர் இம்மானுவேல் மக்ரோனைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தையும் மீண்டும் கொண்டுவரப் போவதாக LFI கட்சி அறிவித்துள்ளது.
அரசியல் களத்தின் மறுமுனையில் இருக்கும் தீவிர வலது சாரிக் கட்சியான தேசிய பேரணி (RN) கட்சியும் இதே போன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella), "இது ஒரு மோசமான நகைச்சுவை, ஒரு ஜனநாயக அவமானம்.
எதிர்காலமே இல்லாத இந்தக் கூட்டணி அரசை நாங்கள் உடனடியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம்மூலம் வீழ்த்துவோம்," என்று கூறியுள்ளார்.
ஆளும் தரப்பிலும் விரிசல்
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, அதிபர் மக்ரோனின் சொந்தக் கூட்டணியிலேயே இந்த முடிவுக்கு முழுமையான ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சரான ஆக்னஸ் பேனியர்-ருனாச்சர் (Agnès Pannier-Runacher), "மக்ரோன் ஆதரவு பெற்ற ஒருவரையே மீண்டும் பிரதமராக நியமிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது, ஆளும் தரப்பில் இருக்கும் குழப்பங்களையும், விரிசல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இதனால், தனது இரண்டாவது முறை பிரதமர் பதவியை ஏற்கும் லெகோர்னு, பதவியேற்ற முதல் நாளிலிருந்தே அரசு கவிழும் என்ற மாபெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்.
செய்தி தொகுப்பு
சிவா சின்னபொடி
(வீடியோ இங்கே )



