கடவுச்சீட்டு, விசா தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு!
அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை சீராகும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தமது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அத்துடன், நிலைமை சீராகும் வரையில் அவசர பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் தகவல்கள் தவிர, தங்களது எக்ஸ் தளத்தில் வேறெந்த தகவல்களும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலைமை குறித்த முழுமையான தகவல்களுக்கு, பொதுமக்கள் http://travel.state.gov என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் இன்று அத்தியாவசியமற்ற சேவைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க செனட்டில் குறுகிய கால நிதி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஒப்பந்தம் தொடர்பாகக் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையேயான எதிர் நிலைப்பாடுகளை மாற்ற இயலாமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் இதற்கு முன்பு 14 சந்தர்ப்பங்களில் இந்த நடவடிக்கையை எடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    