லே பென் - குற்றவாளியா? பலிக்கடாவா? சுவிசிலிருந்து சண் தவராஜா

ஐனநாயகத் தேர்தல் அரசியல் முறைமையுள்ள நாடுகளில் எதிராளிகளை வீழ்த்த பலவிதமான தந்திரோபாயங்களும் பயன்படுத்தப்படுவதை நாமறிவோம்.
அரசாங்கத்தின் அங்கமாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்துகொண்டு தாம் சாதித்த விடயங்களைப் பட்டியலிடுவதும், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுள் நிறைவேற்றப்பட்டவற்றை எடுத்துக் கூறுவதும் அவற்றுள் ஒரு வகை.
எதிர்க்கட்சிகளின் முறைகேடுகளை, கடந்த காலத்தில் அந்தக் கட்சி விட்ட தவறுகளைப் பட்டியலிடுவது மற்றொரு வகை. தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள்நலத் திட்டங்கள் என்ற அடிப்படையில் அடுத்து என்னவெல்லாம் செய்ய உள்ளது எனப் பட்டியலிடுவது இன்னொரு வகை. ஆனால், தமது கட்சியின் சாதனைகளில் நம்பிக்கை கொள்வதை விடுத்து எதிரணி அரசியல்வாதிகளை முடக்கி விடுவதற்கான பாசிசத்தனமான முயற்சிகளில் ஈடுபடுவது மற்றொரு வகை.
உலகின் பல நாடுகளில் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படுவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது. ஜனநாயகத்தில் தொட்டில் என வர்ணிக்கப்படும் ஐரோப்பிய மண்ணில் இதுபோன்றதொரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்தை உலகுக்கு அறிமுகம் செய்த பிரான்ஸ் நாட்டின் மிகப் பாரிய கட்சிகளுள் ஒன்றான தேசத்துக்கான பேரணி கட்சியின் முக்கிய புள்ளியும், 2027இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான லே பென் மீதான நிதி மோசடி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் அவர் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அரச பதவிகளை வகிப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்றத் தீர்ப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த அதிர்வலைகளையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது. தன் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ள லே பென், போராட்டக் குணமுள்ள பெண்ணான தான் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சகல வழிகளிலும் போராட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, அரசியிலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்ட இந்த வழக்கு, ஜோ பைடன் காலத்தில் தனக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ‘லே பென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரத் தன்மைகள் பற்றியோ அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனைகள் பற்றியோ எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு பெரிய கட்சியின் தலைவர் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்தோ, மில்லியன் கணக்கான கட்சி ஆதரவாளர்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிப்பது குறித்தோ ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எவரும் மகிழ்ச்சி கொள்ள முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலனி. ‘குறித்த தீர்ப்பு புருசெல்ஸின் யுத்தப் பிரகடனம்’ எனக் கூறியுள்ளார் இத்தாலியின் பதில் பிரதமரான மற்றியோ சல்வினி. பிரான்சின் தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சியாக தேசத்துக்கான பேரணிக் கட்சியே உள்ளது. வலதுசாரிக் கட்சி என வர்ணிக்கப்படும் இந்தக் கட்சி ஆளுங் கூட்டணியில் அங்கம் பெறாத போதிலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக உள்ளது. மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்விகண்ட ஒருவராக லே பென் உள்ளார்.
2017 மற்றும் 2022இல் நடைபெற்ற தேர்தல்களில் இவர் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல்நாளான மார்ச் 30ஆம் திகதி பிரான்சில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 34 முதல் 37 வீதமானோர் தாம் லே பென்னுக்கு வாக்களிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர். இதனை வேறுவிதமாகக் கூறுவதானால் அன்றைய நாளில் தேர்தல் நடைபெற்றிருந்தால் அவரே நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகி இருப்பார்.
இரண்டாவது இடத்தில் உள்ள இவரது போட்டியாளர் எனக் கருதப்படும் மேனாள் பிரதமர் எடுவாட் பிலிப் அவர்களை விடவும் பத்து விழுக்காடு அதிகமான செல்வாக்கை லே பென் பெற்றிருந்தார். அதேவேளை, 2022இல் கொண்டிருந்த செல்வாக்கை விடவும் 22 விழுக்காடு அதிக செல்வாக்கை அவர் அன்றைய நாளில் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லே பென் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டு மக்களின் பிரச்சனைகள் ஒரே இரவில் தீர்த்து வைக்கப்படும் என யாராவது நம்பினால் அது பேதமை.
யார் ஆட்சி பீடம் ஏறினாலும் அவ்வாறு நடைபெறாது என்பதே யதார்த்தம். ஆனால், ஐரோப்பாவின் எரியும் பிரச்சனைகளுள் ஒன்றான உக்ரைன் போருக்கு விரைந்து தீர்வு காணப்படும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பம் முதலே ரஸ்யாவுக்கு எதிரான பொருண்மியத் தடை நடவடிக்கைகளையும், உக்ரைனுக்கான போர் ஆயுத, தளபாட விநியோகங்களையும் எதிர்த்து வருபவர் அவர். அவரின் இத்தகைய கொள்கைகளே அவரது அரசியல் செயற்பாடுகளை முடக்குவதற்கான உந்துதலை ஆளும் தரப்புக்கு வழங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.
தவிர, பெரும்பான்மை மக்களின் விருப்பு என்பது ஜனநாயக நடைமுறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அது ஆளும் வர்க்கத்துக்குச் சாதகமான ஒன்றாகத்தான் அமைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது. தனது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக லே பென் கூறியுள்ளார்.
அவரது வாதம் மேன்முறையீட்டில் ஏற்றுக் கொள்ளப்படுமா? தீர்ப்பு மாற்றியமைக்கப்படுமா? என்பன போன்ற விடயங்களைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மேன் முறையீடு என்பது பிரான்சைப் பொறுத்தவரை மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்றுவரும் ஒரு நடைமுறையாக உள்ள நிலையில் அதற்காகவே அவர் ஆகக் குறைந்தது ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஒருவேளை, அவரது மேன்முறையீடு நிராகரிக்கப்படுமானால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கிடையில் 2027 தேர்தல் முடிந்துவிடும்.
மேன்முறையிட்டுத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது தேசியப் பேரணிக் கட்சிக்குச் சாதகமாகவே அமையக் கூடும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. மேன்முறையீடு லே பென்னுக்குச் சாதகமாக அமையுமானால் தன் மீதான வழக்கு அரசியல் காரணங்களுக்காகச் சோடிக்கப்பட்ட வழக்கு என்ற வாதத்தை நிரூபித்து அதிக வாக்குகளை அவர் பெற வாய்ப்புண்டு. மேன்முறையீட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் கூட அதே வாதத்தை முன்வைத்து தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஒருவரை வெற்றிபெறச் செய்ய முடியும் என்பது அவதானிகளின் பார்வையாக உள்ளது. லே பென் போட்டியிட முடியாத ஒரு சூழல் உருவாகுமானால் அவருக்குப் பதிலாக தேசியப் பேரணிக் கட்சியின் தலைவராக உள்ள 29 வயது நிரம்பிய யோர்டன் பார்டெல்லா போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இளைய தலைமுறைத் தலைவராகப் பார்க்கப்படும் அவர் இளையோர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவராகக் கருதப்படுகின்றார்.
டிக் டொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக விளங்கும் அவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் 18 முதல் 24 வயது நிரம்பிய கட்சி ஆதரவாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிகின்றது. செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களை நீதிமன்றத்தின் உதவிகொண்டு முடக்கும் செயற்பாடுகள் பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை புதிய விடயமல்ல. பிரான்ஸ் அரசியலைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு இந்த விடயம் நன்கு புரியும்.
ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்குத் தயாராக உள்ளவர்களைக் கண்டும் காணாமல் விடுவதும், முரண்டு பிடிப்பவர்களை நீதி மன்றத்தின் துணையுடன் முடக்குவதும் காலங்காலமாக நடந்து வருகின்ற ஒரு விடயமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது லே பென்னைக் குறிவைத்து வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு - அவர் மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் - வழங்கப்பட்டுள்ளமை இத்தகைய சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி தோல்விகள் வாக்குப் பெட்டிகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை, சில வேளைகளில் அவை நீதிமன்றங்களாலும் கூடத் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கூற்றுக்கு லே பென் வழக்கின் தீர்ப்பு ஒரு சான்றாக உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




