’2040 ஆம் ஆண்டில் பசுமை இலக்குகளை அடைவோம்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 month ago
’2040 ஆம் ஆண்டில் பசுமை இலக்குகளை அடைவோம்

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 களில் பசுமை இலக்குகளையும் அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் போது இந்த இலக்கை அடைய வேண்டும். 2050 வரை காத்திருக்காமல் 2040க்குள் இந்த இலக்கை அடைவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கேற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது தேசிய கொள்கையாக மாறும். அன்றிலிருந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கேற்ப செயல்பட வேண்டும், அரசு சாரா பிரிவுகளும் அதன்படி செயல்பட வேண்டும். அத்துடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

 சுற்றுச்சூழல் சட்டம் 80 களில் தயாரிக்கப்பட்டது. இப்போது நிலைமை அதனை விட மாறிவிட்டது. எதிர்காலத்தில் அந்தத் திருத்தங்களைச் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். 

 குறிப்பாக, காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தை நிறுவும் சட்டத்தையும் முன்வைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இரண்டு வரைவுகளும் அமுல்படுத்தப்படும் போது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அடிப்படை சட்டக் கட்டமைப்பை இலங்கை கொண்டிருக்கும். பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாக நிதி அமைச்சில் தனிப் பிரிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். 

பசுமைப் பொருளாதாரத்திற்கான திட்டங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் அந்த பிரிவு மூலம் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த முழுமையான பொறிமுறையை நாம் எதிர்பார்த்துள்ளோம். மேலும், இந்த சுற்றாடல் கொள்கையின்படி தற்போது தொடங்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

 இதன் மூலம் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுச்சூழல் கொள்கைகளும் கிராமத்திற்கு செல்கிறது. எனவே இந்த வேலைத்திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்துவோம் என்றார்.