அநுர அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றது! அம்பிகா கண்டனம்

அநுரகுமார அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ்தள சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால் இது பயங்கரவாத தடைச்சட்டத்தை அவமதிப்பு செய்யும் செயல்.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவம் பயங்கரவாத சம்பவமில்லை, சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது.
பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அது வழமையானதாக மாற்றப்படுகின்றது.
இது அதளபாதாளத்தை நோக்கிய வீழ்ச்சியாகும்.தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது. நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார் என ஒக்டோபர் 29ஆம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன. அரசியல் பழிவாங்கலுக்காக அதனை பயன்படுத்தமாட்டோம், என அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அது முறையற்ற விதத்தில் செயற்படுத்தப்படுகின்றது என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.



