பண மோசடி தொடர்பில் மக்களுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கை!
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகள் என்றோ அல்லது வங்கிப் பிரதிநிதிகள் என்றோ தவறாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடி குழு பணமோசடி அல்லது நிதி குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றங்களுக்காக நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்றும், உடனடி கைது அல்லது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் கூறி பயத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது அண்மைய பரிவர்த்தனைகள் போன்ற பகுதியளவு தனிப்பட்ட விபரங்களை அடிக்கடி குறிப்பிடுவார்கள் எனவும் விசாரணை இரகசியமானது என்ற போர்வையில், குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரிடமும் இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணைச் சரிபார்ப்பு அல்லது தற்காலிக அரசாங்கக் கணக்கு போன்ற காரணங்களைக் கூறி, குறிப்பிட்ட கணக்குகளுக்குப் பணத்தை வைப்புச் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பார்கள். PIN, OTP, கணக்கு இலக்கங்கள் போன்ற இரகசிய வங்கித் தகவல்களை வெளியிடக் கோருவார்கள்.
இந்தநிலையில் எந்தவொரு பொலிஸ் அதிகாரியோ அல்லது அரச நிறுவனமோ தொலைபேசியில் பணம், வங்கி விபரங்கள் அல்லது ரகசிய தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கோர மாட்டார்கள் என்று இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெறும் பொதுமக்கள் உடனடியாக அழைப்பைத் துண்டித்து, எந்தத் தகவலையும் பகிர்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் மோசடி அழைப்புகள், வட்ஸ்அப் தகவல்கள் அல்லது அழைப்புப் பதிவுகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
