சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி கட்டி போராட்டத்திற்கு அழைப்பு!

#SriLanka #Independence
Mayoorikka
10 months ago
சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி கட்டி போராட்டத்திற்கு அழைப்பு!

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொது இடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 இது தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் திகதியினை சிறிலங்கா தேசம் தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும்.

 வரலாற்றுரீதியாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும், அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது. 

 இன்று தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி ஏறி உள்ள ஜனதா விமுத்தி பெரமுன (JVP) எனும் சிங்கள அடிப்படைவாத கட்சி தம்மை மாற்றத்தின் நாயகர்களாக காட்டி முற்பட்டாலும் அவர்களின் உண்மை முகம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

 என்றுமில்லாதவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறியவர்கள் இலங்கை தீவின் அதி உச்ச பிரச்சனையான தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக எவ்வித அக்கறைகளுமின்றி, ஏன் அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்ற கோதாவிலேயே நடந்து வருகின்றனர்.

 அத்துடன் சிங்கள பேரினவாதத்தால் இனத்தின் மீதான இனவழிப்பினை மறுதலித்து, அலட்சியத்துடன் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டதாக கூறுகின்றனர். அரசியல் கைதிகள் யாரும் இல்லை என முன்னைய அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களின் போராட்டத்தினை பயங்கரவாதமாகவே சித்தரிக்க முயல்கின்றனர்.

 சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும், சிங்கள பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவ பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால் எம்மை போன்ற அரசியல் அறிவீலிகள் யாரும் இருக்க முடியாது. மேலும், இந்த அரசானது இலங்கையர் எனும் அடையாளத்தின் கீழ் தமிழ் மக்களின் தனித்துவத்தை அழித்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 

 மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு வரும் சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை தொடர்ச்சியாக தமிழர் தேசம் கரிநாளாக அனுசரித்தது போலவே இம்முறையும் அனுசரிக்க அறைகூவல் விடுக்கின்றோம். 

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொதுவிடங்கள், கடைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள், எமது வீடுகள் என்பவற்றில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 இந்நாளில் உங்களின் உரிமை குரலுடன் சிங்கள அரசுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 தமிழர் தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இறையாண்மை உள்ள தனித்தேசமாக மலரும் நாளே தமிழினத்தின் சுதந்திர நாள் என்பதனை மனதில் கொண்டு விடுதலைக்காய் போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை