விவசாயத் தொழில்களை வலுப்படுத்துதல் நிகழ்ச்சி திட்டம் வவுனியாவில் வெற்றிகரமாக நிறைவு

#SriLanka #Vavuniya #famers
Lanka4
2 weeks ago
விவசாயத் தொழில்களை வலுப்படுத்துதல் நிகழ்ச்சி திட்டம் வவுனியாவில் வெற்றிகரமாக நிறைவு

மேம்படுத்தப்பட்ட உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காக சிறு விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் வீட்டு சார்ந்த விவசாயத் தொழில்களை வலுப்படுத்துதல் நிகழ்ச்சி திட்டம் வவுனியாவில் வெற்றிகரமாக நிறைவு

மேம்படுத்தப்பட்ட உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காக சிறு விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் வீட்டு சார்ந்த விவசாயத் தொழில்களை வலுப்படுத்துதல் நிகழ்ச்சி திட்டம் 1500 பெண்களின் பங்களிப்புடன் வவுனியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2023 இல் பல்ம் அமைப்புடன் இணைந்து, ஜப்பானிய துணை பட்ஜெட் உதவியின் கீழ், குடும்ப ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 'மேம்படுத்தப்பட்ட உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காக சிறு விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் வீட்டு சார்ந்த விவசாயத் தொழில்களை வலுப்படுத்துதல்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டமானது வவுனியா, வவுனியா தெற்கு மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 03 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 52 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 1500 பெண்கள் பயனடைந்தனர். இந்த திட்டத்தில் 30,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தற்போது வவுனியா மாவட்டத்தில் மாதாந்தம் 288,000 முட்டை உற்பத்தியை காணமுடிகிறது. இதுவரை, இருபது விவசாயிகள் மற்றும் இருபது பொருத்தமான நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இருபது ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து கோழித்தீன்களை வழங்குவதற்காக சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

மேலும் யுஎன்டிபி அதற்கான விதைகள் மற்றும் நீர்ப்பாசன முறைகளை வழங்கியது. அனைத்து இருபது விவசாயிகளுக்கும் சோளப்பயிற்செய்கை செய்வதற்காக 150 கிலோ சோள விதைகள் விநியோகிக்கப்பட்டன. இருபது விவசாயிகளும் சோளம் பயிரிட்டு 12,500 கிலோ சோளத்தை தங்கள் பயிற்செய்கை மூலம் பெற்றனர். இதன் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதார மீட்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் நிறைவு விழா வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பி.எம.ஏ.கே.குமார, பல்ம் நிறுவன செயற்றிட்ட முகாமையாளர் சுனில் தொம்பேபொல, திட்ட முகாமையாளர் தமித் சந்திரசேகர, கள ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா விஜயசுந்தர, யுஎன்டிபி நிறுவன உறுப்பினர்கள், மற்றும் இத்திட்டத்தில் பணியாற்றிய அரசாங்க, நிறுவன உத்தியோகத்தர்களுடன் இணைந்து பணியாற்றிய பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள், செயற்றிட்டத்தின் முகாமையாளர், யுஎன்டிபி நிறுவன உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அரசாங்க மற்றும் நிறுவன உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இச் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரால் செயற்றிட்ட பெறுபேறுகள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இச்செயற்றிட்ட வெற்றிக் காணொளிகள் காண்பிக்கப்பட்டு தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.