பாரிஸ் கிளப் இந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டவுள்ள இலங்கை!

இலங்கையானது பாரிஸ் கிளப் நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான இறுதித்தறுவாயில் இருப்பதாகவும், 6 வருடகாலம் வரையிலான கடன்மீள்செலுத்துகை இடைநிறுத்தம் மற்றும் மீள்செலுத்துகை காலம்வரை வட்டிக்குறைப்பு என்பன அந்த இணக்கப்பாடுகளாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடன்மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளுடன் நன்கு பரிச்சயமான ஒருவரை மேற்கோள்காட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான 'த இந்து' வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளன.
அதன்படி கடன்மறுசீரமைப்பு தொடர்பில் வெகுவிரைவில் உத்தியோகபூர்வ இணக்கப்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கலாம்' என கொழும்பைத் தளமாகக்கொண்ட தகவல் மூலமொன்று தமக்குத் தெரிவித்ததாக 'த இந்து' அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, அதன் நிபந்தனைகளுக்கு அமைவாக கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கைக்குக் கடன்வழங்கிய 17 நாடுகள் இணைந்து 'உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவை' உருவாக்கின. இருப்பினும் சீனா அக்குழுவில் இணைந்துகொள்ளாத போதிலும், அக்குழுவின் கூட்டங்களில் அவதானிப்பாளராகப் பங்கேற்றது.
அதன் நீட்சியாக இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருப்பதுடன், அதற்கு நாணய நிதிய இயக்குனர் சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேலும் 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென நேற்று முன்தினம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ள பின்னணியிலேயே இச்செய்தி வெளியாகியுள்ளது.



