திடீரென ஹட்டனில் குவிந்த தென்னிந்திய நடிகைகள் :ஒருநாள் கொண்டாட்டம், மறுநாள் திண்டாட்டம்!

இலங்கை - ஹட்டன் பகுதியில் இன்றைய தினம் (21.01) தைத்திருநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல நடிகைகள் அழைக்கப்பட்டிருந்ததை கவனிக்கக்கூடியதாக இருந்தது.
அண்மையில் திருகோணமலையிலும் தேசிய பொங்கல் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிகட்டு போட்டிகள் என இந்தியர்களின் பாராம்பரியங்கள், கலாச்சாரங்கள் இலங்கையிலும் கடைபிடிக்கப்பட்டன.
தற்போது இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படுவதன் பின்னணி குறித்துதான் கேள்வி எழுகிறது.
குறிப்பாக இந்திய கலாச்சாரத்தை இலங்கை தமிழர்கள் மத்தியில் திணிக்கும் நிகழ்வு மறைமுகமாக இடம்பெற்று கொண்டிருப்பதாகவே விமர்சகர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.
இதுவரை காலம் வரையில் இல்லாமல் இவ்வாறான நிகழ்வுகள் மக்களின் எண்ணத்தை திசைதிருப்பவா, அல்லது உலக அரங்கில் இலங்கையில் எவ்விதமான பொருளாதார பிரச்சினைகளும் இல்லை, மக்கள் சௌபாக்கியமாக வாழ்கிறார்கள் என எடுத்துக்காட்டுவதற்காக நடத்தப்படுகின்ற அரசியல் நாடகமா? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
அப்பாவி மக்களும் ஒருநாள் கொண்டாட்டம் மறுநாள் திண்டாட்டம் எனும் நிலையில், சில அரசியல் தலைவர்களின் சூட்சுமம் புரியாமல் அவர்களின் பின்னால் நிற்பது வேடிக்கைக்குரியதுதான்.
எது எவ்வாறாயினும் மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும், அரசியல் தலைவர்களும் செயற்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


