பெறுமதி சேர் வரி சாமானியர்களுக்கு மட்டும்தானா? : திரைமறைவில் நடக்கும் நாடகம்தான் என்ன?

#SriLanka #Article #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #srilankan politics #lanka4Media
Dhushanthini K
1 year ago
பெறுமதி சேர் வரி சாமானியர்களுக்கு மட்டும்தானா? : திரைமறைவில் நடக்கும் நாடகம்தான் என்ன?

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலின்பேரில் பெறுமதி சேர் வரியை (வட் வரியை) 15 சதவீதத்தில் இருந்து 18 வீதமாக  உயர்த்தியுள்ளது. இது அனைவரும் அறிந்ததே. இந்த வரி அதிகரிப்பானது அரசாங்கம் மாறும் வரையிலோ, அல்லது இலங்கை பொருளாதாரம்  மீட்சி பெறும் வரையில் தான் அமுலில் இருக்கும் என்று சிலர் (சமூகத்தில் பின்தங்கிய மட்டத்தில் இருப்பவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் இந்த வரி அதிகரிப்பானது இனி ஒருகாலமும் குறையாது. அடுத்து வரக்கூடிய அரசாங்கங்களும் இதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

இவை ஒருபுறம் இருக்க 18 வீத வட் வரி அதிகரிப்பானது இவ்வருடத்தின் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வந்திருந்தது. இந்த வரி அமுலுக்கு வந்த நாள் முதல் அனைத்து பொருட்களும், சடுதியாக அதிகரித்தன. ஏற்கனவே இலங்கையின் பொருளாதார நிலைமை, கொவிட் தொற்று என பல விடயங்களில் அடிவாங்கிய இலங்கை மக்களுக்கு இந்த வட் வரி அதிகரிப்பு மிகப் பெரிய தலைவலியாக அமைந்தது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் வெளியான அறிக்கையொன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது இலங்கையில் அரைவாசி பகுதியினர், அல்லது கணிசமானவர்கள் இரண்டு வேளை உணவை பெற்றுக்கொள்ளவே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் இன்று ஒருவேளை உணவை பெற்றுக்கொள்வது கூட கடினம் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தால் செத்து மடிவார்கள் என்பது கண்கூடான உண்மை. அத்தோடு, களவு அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் பெறுகும். இவ்வாறாக மக்கள் பசியாலும், வறுமையாலும், விரக்தியிலும் இருக்கும் சந்தர்பங்களில் சில மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். 

இங்கு ஆட்சிக்கு வர ஆசைப்படுபவர்களாக இருக்கட்டும், அல்லது அதற்கு போட்டியிடுபவர்களாக இருக்கட்டும் வெறுமனே கதிரைக்கு அடித்துகொள்கிறார்களே தவிர மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக ஓட்டு கேட்டு கும்பிடு போடு அரியனை ஏறியவர்கள் எல்லாம், வெறும் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களுக்காக பேசுவதும், அந்த பேச்சில் மயங்கி மீண்டும் அவர்களையே தெரிவு செய்து அமைச்சரவைக்கு அனுப்புவதும், வேடிக்கையாகிவிட்டது. 

மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் உண்மையில் மக்களுக்கு சேவை செய்கிறார்களா? அண்மையில் ZEE தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமபா போட்டி நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு இலங்கையை சேர்ந்த இருவர் போட்டியிட்டு மக்களின் மனங்களை வென்றிருந்தார்கள். அதில் அசானி என்ற சிறுமி மலைய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி “ என் மக்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன்” எனக் கூறி மலையக சமூகத்தை உலகறிய செய்திருந்தார். 

அந்த நிகழ்சிக்கு சென்ற பிரபல  அரசியல்வாதி ஒருவர் அங்கு சென்று அசானியை புகழ்ந்து பேசி மலையக மக்களின் இன்னல்கள் குறித்தும் கதைத்திருந்தார். மலையக மக்கள் இலங்கைக்கு வந்து ஏறக்குறைய 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந்த 200 ஆண்டுகளில் அசானி என்ற ஒரு சிறுமிதான் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர தேவைப்பட்டாரா? அவரூடாகத்தான் மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா? அப்படியென்றால் இத்தனை  வருடகாலம் அவர்கள் மலையக மக்களுக்காக என்ன செய்தார்கள்? ஆக உங்கள் சுயலாப அரசியலுக்காக அந்த சிறுமியையும், மலையக சமூகத்தையும் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இவையொருபுறம் நிற்க கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு செய்தியை வாசிக்கக்கூடியதாக இருந்தது. அதாவது நாட்டு மக்கள் அனைவரும் வறுமையில் நிர்கதிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு கப்பலில் புதுவருட பிறப்பை கொண்டாடினார்களாம். யாருடைய வரி பணத்தில் இந்த கேளிக்கை கொண்டாட்டங்களை கொண்டானார்கள்? அரசு கஜானா காலியாக இருக்கும்போது மற்ற நாடுகளுக்கு கடன் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும்போது இந்த ஆடம்பர கேளிக்கை கொண்டாட்டங்கள் தேவைதானா?

அதுமட்டும் இல்லாமல் பிரபல அரசியல் தலைவரின் வாசஸ் தலத்திற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக செலவில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அந்த மின் உற்பத்தி இயந்திரம் 18 வீத வட் வரி இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. ஆக சாமானிய மக்களுக்கு மட்டும் தான் இந்த வட்வரி எல்லாம். அரச தலைவர்களுக்கு கிடையாது என்றே நினைக்கத்தோன்றுகிறது. 

உண்ணும் உணவில், இருந்து பெரும் அனைத்து பொருட்களுக்கும் சாமானியர்களுக்கு ஒரு மாதிரியும், அரசியல் வாதிகளுக்கு ஒருமாதிரியும் இருக்கும் இந்த சூட்சுமங்களை என்ன சொல்வது, திரைமறைவில் இவர்கள் நடத்தும் அரசியல் நாடகம் தான் என்ன? மக்களே சற்று சிந்தித்து பாருங்கள். 

எங்களுடைய வரியில் தானே அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் தானே அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. அவர்களே விலைவாசி உயர்வு, கொடுப்பனவு போதவில்லை என்று சேவைகளை முடக்கி வீதிக்கு  இறங்கி விட்டார்கள். அரசும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை கொடுக்கிறது. ஆனால் தினக்கூலிகளின் நிலைமையை யார் யோசிப்பது. அரச ஊழியர்களுக்கு ஒரு விலையும், தினக்கூலிகளுக்கு ஒரு விலையுமா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இங்கு அனைத்து இலங்கையர்களும்தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள், சற்று சிந்தித்து பார்த்து சரியான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுங்கள். இல்லையேல் பாதிக்கப்படப்போவது அரசியல்வாதியோ, அவர்களுடைய பிள்ளைகளோ அல்ல. நாம் தான்! நம் பிள்ளைகள் தான்! நாளைய எதிர்காலம் நம்பிள்ளைகளுடையதாய் இருக்கட்டும்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!