இலங்கை மற்றும் பெனினுக்கு இடையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உகண்டாவின் கம்பாலாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பெனின் நாட்டின் துணை ஜனாதிபதி மரியம் சாபி தலதாவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பெனின் அரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 2012ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் திகழும் பெனின் மாநிலத்தின் பருத்தித் தொழிலில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் ஆடைத் துறையில் உள்ள வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பெனின் துணைத் தலைவர், இலங்கை முதலீட்டாளர்களை பரிந்துரை செய்யுமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் பெனின் நாட்டிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இரு நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமலேயே முப்பது 30 நாட்கள் வரை ஒரு நாட்டிற்குள் நுழைந்து தங்குவதற்கு ஒப்பந்தம் அனுமதி வழங்குகிறது.
இலங்கைக்கான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பெனின் வெளிவிவகார அமைச்சர் ஒலுஷேகுன் அட்ஜாடி பக்காரி ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இலங்கைக்கும் பெனினுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய பரிமாணத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் உருவாக்கப்படக்கூடிய புதிய பொருளாதார வாய்ப்புகளை ஆராய விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெனின் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட்க்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த எத்தியோப்பிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் ஆடைத் தொழில் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன் புதிய முதலீட்டுத் துறைகளை ஆராய்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.