மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை பொருட்படுத்தப் போவதில்லை! டிரான் அலஸ்
யுக்திய விசேட சுற்றிவளைப்பை நிறுத்துமாறு அமெரிக்க தூதுவர் குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடும் அறிக்கைகளை பொருட்படுத்த போவதுமில்லை, அதற்கு பதிலளிக்க போவதுமில்லை.
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன். யுக்தியவுக்கு எதிராக செயற்படும் நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஊடக காட்சிப்படுத்தலுக்காக யுக்திய என்ற விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள் காட்சிப்படுத்தலா அல்லது உண்மை நோக்கமுடையதா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். யுக்திய விசேட சுற்றிவளைப்புக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். யுக்திய விசேட சுற்றவளைப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து நான் அவரிடம் வினவினேன்.
தான் அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை என்றார். இந்த விசேட சுற்றிவளைப்புகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எனக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. நான் அதை பொருட்படுத்த போவதுமில்லை. அதற்கு பதிலளிக்க போவதுமில்லை. போதைப்பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன்.
யுக்திய செயற்திட்டத்தினால் நாட்டின் தற்போது 17 சதவீதமளவில் சமூக விரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன. ஆகவே நாட்டு மக்களுக்கான செயற்பாட்டை எக்காரணிகளுக்காகவும் இடைநிறுத்த போவதில்லை. இந்த விசேட செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படும் முக்கிய நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் வெளியிடுவேன் என்றார்.