யுக்திய நடவடவடிக்கை - இதுவரை 40,590 பேர் கைது
யுக்திய நடவடிக்கை ஊடாக கடந்த ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் குற்றங்களுக்காக 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 38,225 சந்தேக நபர்களில், 1,703 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 1,867 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 225 சந்தேகநபர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 2,801 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 4,791 மில்லியனை அண்மித்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தைப் பெறுமதி 725 மில்லியனை அண்மித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 2,365 சந்தேக நபர்களில், 536 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும், 1,499 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படாமல் இருந்த 149 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 181 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.