சட்டவிரோத மின்சார வேலிகளால் 50 யானைகள் பலி : முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகம்!
விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலிகளால், 50 காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால் மொத்தம் 474 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, யானைகளைக் கொல்ல சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மின்சார சபை ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது. நாட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க மக்கள் ஆதரவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோருகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்கும் வேலிகளுடன் மின்கம்பிகளை இணைப்பது தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக நேரடியாக முறைப்பாடு செய்ய 1987 என்ற அவசர இலக்கத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளது என்பதையும் அவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.