புனர்வாழ்வுத் திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!
புனர்வாழ்வுத் திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
கந்தகாடு மையத்தில் இடம்பெறும் சில மோதல்களின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத கரம் செயற்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக தற்போது சந்தையில் ஹெரோயின் தட்டுப்பாடும், போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஆட்கள் இல்லாததும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பிரச்சினையாக உள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு அடிமையானவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்காக கந்தகாடு சேனாபுர உள்ளிட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், அந்த முகாம்களில் தங்கியுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் கைதிகள் தப்பிச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதிகளை இந்த நிலைமைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் நீண்ட விசாரணைகளை மேற்கொள்ள புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணையின் பின்னர் அவர்கள் மையங்களில் இருந்து அகற்றப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது.