விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை! தோல்வியடைந்தது இணைக்கப்பாட்டுக்கான கலந்துரையாடல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தெரிவு தொடர்பில் அண்மைய நாட்களாக அரசியல் அவதானிகளிடையே உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வரும் விடையமாக அமைந்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சியின் மாநாடு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த மாநாட்டின் போது கட்சியின் நிர்வாகத் தெரிவு இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தலைமைத்துவ போட்டிக்காக மூன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சீனித்தம்பி யோகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள தேசிய இன விடுதலை போராட்டத்தினை மையமாகக் கொண்டு பல்வேறு கட்சிகள் உருவாகி பல்வேறு கொள்கை பரப்புதல்களை செய்து மக்களை பிளவு படுத்தியிருக்கும் நிலையிலே தமிழ்த்தேசியம் பேசிவந்த பிரதான கட்சி ஒன்றும் அதன் தலைமைக்காக போட்டி அல்லது பிளவுபட்டுக்கொண்டு உள்ள நிலைமை மக்களை சிந்திக்க வைக்கும் விடயமாக அமைந்துள்ளது.
உலகமட்டத்தில் இந்த தலைமை பதவிக்கான தெரிவு போட்டித் தவிர்ப்பை பலர் விரும்பியிருந்த நிலையிலும் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி போட்டி தவிர்ப்பு ஒன்றை மேற்கொள்வதற்காக மூன்று வேட்ப்பாளர்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர்களுக்கிடையில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு முடிவிற்கு வருமாறு வேண்டப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கூடிய மூன்று வேட்ப்பாளர்களும் கூடி கலந்துரையாடிய நிலையில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லாமல் போயுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனநாயக ரீதியாக அந்த கட்சியின் கோட்ப்பாடுகளுக்கு இணங்க தலைமைப்பதவி தெரிவிற்கு விடப்படவிருக்கின்றது என்பது தற்பொழுது வெளியாகியுள்ளது.