கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் - ரணில் பெருமிதம்!
நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றியுள்ளார்.
நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
"நான் இன்று சபையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாற்றுகிறேன். திவாலான நாடு என்ற முத்திரையைக் காப்பாற்ற நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதை வழிநடத்த முடிந்ததில் நான் பணிவான மகிழ்ச்சியை அடைகிறேன்.
நான் கடந்த ஆண்டு திவாலான நாட்டை பொறுப்பேற்றேன். இந்த திவாலான நாட்டைக் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை.
இந்த சவாலை ஏற்க அனைவரும் பயந்தனர்.
இப்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றும் மாவீரர்கள் எவருக்கும் அன்று முன்வருவதற்கு தைரியம் இல்லை. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.