அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை சந்தித்த ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #America #Ranil wickremesinghe #Development #economy
Mayoorikka
2 years ago
அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை சந்தித்த ஜனாதிபதி!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தரமான முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசியப் பிராந்தியத்துக்கு மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கக்கூடிய ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையம் ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் 553 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. 

இந்நிதியுதவி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதன் இரண்ட நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (7) நாட்டை வந்தடைந்தார்.

 இவ்விஜயத்தின்போது சுகாதார விஞ்ஞான சர்வதேச நிலையம், கொழும்பு துறைமுகம் போன்றவற்றைப் பார்வையிட்ட அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், தனியார்துறை முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தரமான முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அதுமாத்திரமன்றி இலங்கையின் தனியார்துறை மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக அந்நாட்டுத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

 அதேபோன்று ஸ்கொட் நாதனுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இருநாடுகளும் இணைந்து கூட்டாக முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. 

அத்தோடு ஜனநாயக ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் நியாயமான சட்டங்கள் ஊடாக வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தில் நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 அதேவேளை சக்திவலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் நாட்டின் தனியார்துறை வங்கிக்கட்டமைப்புக்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரையும் சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதன் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!