மூன்று யுத்த குற்றவாளிகள் சர்வதேச இராஜதந்திரிகளாக நியமிப்பு: சிவில் அமைப்பொன்று வெளியிட்ட தகவல்
யுத்த குற்றம் சாட்டப்பட்ட மூவரை சர்வதேச இராஜதந்திரிகளாக நியமித்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்களிற்காக எவரையும் பொறுப்புக்கூறச் செய்யப்போவதில்லை என்ற வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது.
மூன்று யுத்த குற்றவாளிகளான ரவீந்திரசந்திரசிறி விஜயகுணரட்ண தமித் நிசாந்த சிறிசோம உலுகெட்டென சுதர்சன்பத்திரன ஆகியோரை சர்வதேச இராஜதந்திரிகளாக நியமித்துள்ளதன் மூலம் இலங்கை தனது தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட கலாச்சாரத்தை தொடர்ந்து பறைசாற்றிவருகின்றது என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடகிழக்கில் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தை சேர்ந்தவரையோ அல்லது அரசியலை சேர்ந்தவரையோ பொறுப்பேற்கச் செய்யப்போவதில்லை என்பது குறித்த இலங்கை அரசாங்கத்தின் வலுவான அரசியல் அர்ப்பணிப்பை துணிச்சலாக வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நியமனங்கள் அமைந்துள்ளன எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வருடத்தினை நினைவுகூறுவதற்கு முன்னர் நாங்கள் இந்த மாதம் மாவீரர் தினத்தை நினைவேந்துவதற்கு தயாராகிவரும் இவ்வேளையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் உறுதிப்பாடு இல்லை என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு இலங்கையில் தற்போது காணப்படும் தோல்வியடைந்த சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினால் வடகிழக்கு தமிழர்களிற்கு நீதியையும் அரசியல் தீர்வினையும் வழங்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
உலுகெத்தனவும் பத்திரனவும் ஆயுத மோதலின் இறுதிக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் தொடர்புடையவர்கள்.
விஜயகுணரட்ண 11 பேர் கொழும்பில் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கியசந்தேகநபர் என குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சிக்கு உதவியதற்காக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.