அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்க!
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, நாடு பின்னோக்கிச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (04.11) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக இதுவரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டனர்.
நுவரெலியா தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்கவின் கருத்துக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டார்.
நுவரெலியா தபால் அலுவலகம், பிராந்திய வருமான வரி அலுவலகம் ஆகியவற்றை வேறு பொருத்தமான இடத்தில் நிறுவி, சுற்றுலாத் துறை அல்லது வேறு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி.திசாநாயக்க வலியுறுத்தினார்.