ஐந்து வருடங்களின் பின்னர் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம்!
சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருதரப்பினராலும் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையான 3 தினங்கள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இருதரப்பினருக்கும் இடையே 12 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
'முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், கடந்தகாலங்களில் அடையப்பட்ட முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்தும் அதேவேளை, வளர்ச்சிக்கான புதிய சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கு இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்' என்று இந்தியாவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இப்பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சார்ந்த புதிய வாய்ப்புக்களை உருவாக்கித்தருமென எதிர்பார்ப்பதாகவும், இவ்வொப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தொடர்புகளை விரிவுபடுத்துவதில் முக்கிய நகர்வாக அமையும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'இந்திய - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பின் உச்சபட்ச இயலுமையினை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதுடன் இருதரப்பினரதும் பரஸ்பர அக்கறைக்குரிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கான சாத்தியப்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் கடந்த 2016 - 2018 வரையான காலப்பகுதியில் 11 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன், அதனைத்தொடர்ந்து அப்பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் அப்பேச்சுவார்த்தைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.