இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமினி சுபசிங்க, எம்.ஐ.எம்.மான்சி மற்றும் டபிள்யூ.எச்.ஆர்.பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளாக கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சேவையில் 4718 வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை நியமிக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உயர் நீதிமன்றம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.