வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி : ஒருவர் கைது!
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு முழுவதிலுமுள்ள நபர்களிடம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு பகுதிகளில் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார்.
குறித்த நபருக்கு எதிராக ஹலவத்தை, கணேமுல்ல, வெலிக்கடை, மீகொட, ஆனமடுவ, கடவத்தை, பிலியந்தலை மற்றும் குருநாகல் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான மோசடிகள் தொடர்பான 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சந்தேகநபரால் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில். சந்தேகநபருக்கு எதிராகபாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 10 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, குறித்த சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.