அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்குமா? : சாகர வெளியிட்டுள்ள கருத்து!
பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் தனக்கு வழங்கிவரும் ஆதரவை ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். அதன் முக்கியத்துவத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சுகாதார அமைச்சரரை மாற்றியமை தொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ரமேஸ் பத்திரன ஒரு மருத்துவர். அவர் இன்னும் சிறப்பாக செயற்படுவார் என நான் நம்புகின்றேன். நாங்கள் அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளோம்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு குறைந்தளவு அமைச்சுபொறுப்புகளே உள்ளன என்பதே எங்கள் கரிசனை. ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.
ஏனைய கட்சிகள் குறித்து அக்கறை காட்டப்படுகின்றது. பொதுஜனபெரமுன குறித்து அக்கறை காட்டப்படவில்லை என பொதுமக்களும் கருதுவார்கள். இரண்டு கிழமைக்கு முன்னரே கெஹெலிய ரம்புக்வெலவை பதவி விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார். ரம்புக்வெல அதற்கு இணங்கியிருந்தார்.
ரமேஸ் பத்திரனவை சுகாதார அமைச்சராக பதவி வகிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அதனை நிராகரித்தார்.அதனால் அது தாமதமானது. அவரை மூன்று தடவைகள் கேட்டார். இருப்பினும் அவர் அதனை நிராகரித்தார். எனினும் இறுதியில் அவர் இணங்கினார். ஜனாதிபதி சீனா செல்லவேண்டியிருந்ததால் இந்த நியமனம் தாமதமானது எனத் தெரிவித்துள்ளார்”