சீனாவின் Huawei நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!
இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை உருவாக்குவதற்கான வருடாந்த ஆய்வுத் திட்டத்திற்கு தமது நிறுவனம் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக சீனாவின் Huawei இன் பிரதித் தலைவர் சைமன் லின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் பணிகளுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழகங்களுடன் கல்விப் பணிகள் தொடர்பான ஆதரவை வழங்கும் செயல்முறையை தனது நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக சைமன் லின் மேலும் கூறினார்.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று (17) காலை பெய்ஜிங்கில் உள்ள Huawei இன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக இம்முறை Huawei மையத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.
டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தி தொடர்பில் சீன அரசாங்கம் மற்றும் Huawei நிறுவனத்தின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எதிர்கால உலகிற்கு பலமாக முகம் கொடுப்பதற்கு இலங்கையில் அதிக போட்டித்தன்மை கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமையான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் தற்போது போடப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு Huawei இன் ஆதரவு தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.