2023க்கான உலக அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

#Women #Iran #Nobel #Prize #World
Prasu
1 year ago
2023க்கான உலக அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது. 

விருதுக்கு தகுதியானவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், வேதியியல் மற்றும் இலக்கிய துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 

இதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரானிய பெண்கள் உரிமை பிரச்சாரகரும், மனித உரிமை போராளியுமான 51 வயதான நர்கெஸ் சஃபி மொகமதி (Narges Safie Mohammadi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பவுதிக பட்டதாரியான மொகமதி, ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காகவும் கவுரவிக்கப்படுகிறார் என நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

மொகமதி பல முறை சிறைவாசம், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட நீண்ட போராட்ட வரலாறு கொண்டவர். 5 முறை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 13 முறை ஈரான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மொகமதி, தண்டனையாக 154 முறை கசையடிகளும் வாங்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஒரு விழாவில் மொகமதிக்கு இப்பரிசு வழங்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!