அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்கா 163 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர, ஆண்டு முழுவதும் செயல்படும் இந்த மிருகக்காட்சிசாலையானது குழந்தைகள் உட்பட தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பூங்கா நிர்வாக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பூங்கா வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.பார்வையாளர்கள், பூங்கா நிர்வாகிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பூங்காவை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
எனினும், வெடிகுண்டு அல்லது சந்தேகத்திற்கிடமான வேறு எந்த வெடிக்கும் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் கட்டுக்கதை என்பது தெரியவந்தது. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



