விமானத்தில் வந்த மூன்று கோடி மதிப்புள்ள "குஷ்"
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து வான்வழி தபால் மூலம் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட "குஷ்" எனப்படும் கஞ்சா தொகை ஒன்று சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கையிருப்பின் பெறுமதி சுமார் மூன்று கோடியே நாற்பத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொடை, வெலிசர, நுவரெலியா, தலங்கம ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 10 கஞ்சா பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக யாரும் வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில், அங்கு பணிபுரியும் சுங்க அதிகாரிகளினால் உரிய பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பார்சல்களில் 03 கிலோ 475 கிராம் “குஷ்” போதைப்பொருள் காணப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளுக்காக கஞ்சா பொதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.