வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் 81 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் தாதியர் சேவை மற்றும் ஹோட்டல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் இருந்து இந்தப் பணத்தைப் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பண மோசடி தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சிலாபம் நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்வதற்கான உத்தரவு கிடைத்துள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் நிகவெரட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் முகாமையாளர் கபில கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.