வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரின் வீட்டில் 120 தங்க பவுண்களை கொள்ளையடித்த உறவினர்
வெல்லம்பிட்டிய, மெதொட்டமுல்லவில் உள்ள வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரின் வீட்டுக்குள் புகுந்து சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க பொருட்களை திருடியதாக கூறப்படும் செயலாளரின் உறவினர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய நேற்று (16) உத்தரவிட்டுள்ளார்.
மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் செயலாளரின் உறவினர்களான டில்ஷான் பிரியந்த குமார மற்றும் மதுஷா மதுரங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி வெல்லம்பிட்டிய மீதொட்டுமுல்ல பன்சல்ஹேன பகுதியைச் சேர்ந்த அஜித் குமார செனவிரத்னவினால் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜன்னல் வழியாக நுழைந்த திருடர்கள் இரண்டு அலுமாரிகளில் இருந்த பல கையடக்கத் தொலைபேசிகள், ஐந்து இலட்சம் ரூபா மற்றும் 120 பவுண் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக தனது முறைப்பாட்டில் சமர்ப்பித்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்திருந்தனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட சுமார் 30 பவுண் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்இ அது ஆதாரமாக குறிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.