முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்று மாலை பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக உயிரிழந்த மக்களுக்காக சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
அஞ்சலி உரைகளை இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான ஜெயராஜ் மற்றும் முல்லை ஈசன் ஆகியோர் நிகழ்த்தினர். இதேவேளை முள்ளிவாய்க்காலில் இருந்து புறப்பட்டு குறித்த நினைவேந்தல் இடத்திற்கு வருகைதந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து குறித்த ஊர்தி நாகர்கோவிலில் அஞ்சலி செலுத்தி கிளிநொச்சி நோக்கி புறப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வேலுப்பிள்ளை நவரத்தினம் மற்றும் பருத்தித்துறை தொகுதி தமிழரசு கட்சி அமைப்பாளர் உட்பட பல்வேறு தமிழரசு கட்சி இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.