இனந்தெரியாத மூவரால் தாக்குதலுக்குள்ளான கொழும்பு மகசின் சிறைச்சாலை அதிகாரி
மினுவாங்கொடையில் புதிய மகசின் சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத மூவர் அவரை முழங்காலால் அடித்ததுடன் கொலைமிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த அதிகாரி சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தல் தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தியவர் எனவும் எனவே சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் ஆலோசனையின் பேரில் இது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் இளைஞர் காப்பாளராக கடமையாற்றும் அதிகாரி சங்க குசல் மாரசிங்கவின் மினுவாங்கொடை இல்லத்திற்கு சந்தேகநபர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் தனது தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது வந்த மூவரில் ஒருவர் இந்த சம்பவத்தை கைப்பேசியில் வீடியோ எடுத்து சிறை அதிகாரியின் தலையில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்த அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்இ மேலதிக சிகிச்சைக்காக இன்று (13) பிற்பகல் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், அரச புலனாய்வுப் பிரிவினரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி, கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல வெற்றிகரமான செயற்பாடுகளை மேற்கொண்ட தெரியவந்துள்ளது.
அவர் மீது கோபம் கொண்ட கைதியே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த அதிகாரிக்கு இதற்கு முன்பும் தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.