மோட்டார் சைக்கிள் டிப்பர் மீது மோதியதில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலே பலி
இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் நேற்று (12) மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதிகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரும் கஹவத்த ஓபட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ். மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியர்.
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது. இவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி திடீர் மரண விசாரணை அதிகாரி டி. எம். ஹரீந்திர லக்மினா தென்னகோன் தெரிவித்தார்.
இந்த விபத்து நேற்று 12ஆம் திகதி காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் இரத்தினபுரி திருவனகெட்டிய விகாரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் சென்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.