கெஹலியவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக இடைநிறுத்தம்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்காக அவரது நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (12) உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும், ரஷ்யாவின் மொஸ்காமில் நடைபெறும் மாநாட்டிலும் பிரதிவாதி பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ சுட்டிக்காட்டிய வாதத்தை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிரதிவாதி அமைச்சர் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதாவது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு தேவை இல்லாவிட்டாலும், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 9,90,000 ரூபாவை செலவு செய்து ஜி.ஐ. 600 குழாய்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்ட போதே, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .