மதுபோதையில் பொலிஸார் மீது தாக்குதல்: 5 பேர் வைத்தியசாலையில்
பிலிமத்தலாவ நகரில் மதுபோதையில் இருந்த குழு தாக்கியதில் காயமடைந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11ஆம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இடமாற்றம் பெற்றுள்ள கடுகன்னாவ பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு நேற்று (10ம் திகதி) இரவு பிலிமத்தலாவ ஹோட்டல் ஒன்றில் மதுபான விருந்து இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு கும்பலுடன் பொலிசார் தகராறில் ஈடுபட்டனர். நேற்று (11ம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் பிலிமத்தலாவ நகரில் உள்ள பாலத்திற்கு அருகில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இரு குழுக்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதுடன் கடுகன்னாவ பொலிஸ் நடமாடும் ரோந்து கடமையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன உள்ளிட்ட குழுவினர் அங்கு வந்து மோதலை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது உப பொலிஸ் பரிசோதகரும் தாக்கப்பட்ட நிலையில் அவர் கடுகன்னாவ ஹேனாவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் விருந்தில் கலந்து கொண்டவர்களில் நால்வர் என்பதுடன் அவர்கள் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.