போராடுபவர்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்: நாடாளுமன்றத்தில் சஜித் கோரிக்கை
நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை சமூக வலைதளங்களில் பரப்பி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கும்பல் தாக்குதலுக்கும், உயிருக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தொடர் தாக்குதல்களின் ஒரு படி எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கும்பல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் கும்பல் தாக்கியவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போராட்டத்தின் விளைவாகவே தற்போதைய ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்துள்ளதால் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.