யாழ்ப்பாணம் பாலைவனமாகும் சாத்தியம்: எச்சரிக்கிறார் நீர்ப்பாசன பொறியியலாளர்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளமானது மனித நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் உவர்த்தன்மையாகி யாழ்ப்பாணம் முழுவதும் பாலைவனமாகும் சாத்தியம் இருப்பதாக வட மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் சர்வராஜா தெரிவித்துள்ளார்.
உலக நீர் தினத்தினையொட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வேளையிலேயே அவர் இவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரினை நம் முன்னோர்கள் பொக்கிஷமாகக் கருதினர். யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரை மிகப் பெரிய குளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.அந்தவகையில் நிலத்தடி நீர்தான் யாழ்ப்பாணத்தின் மிகப் பெரும்வரம்.
நிரைச் சேமிப்பது, நீரை மாசடையாமல் பாதுகாப்பது தான் நிலத்தடி நீரை பாதுகாப்பதன் முகாமைத்துவம்.
மலை பெய்தால் எந்தப் பகுதியை நோக்கி நீர்வருமோ அந்த இடத்தில் நம் முன்னோர்கள் குளத்தை அமைத்தார்கள். அந்த குளத்து நீரின் துய்மையை பேணுவதற்கும் நீர் ஆவியாவதை தடுப்பதற்கும் குளங்களை சுற்றி மருது, நெல்லி, நாவல் போன்ற மரங்களை நாட்டினார்கள்.
குளங்கள் மாசுபடுவதை தவிர்க்க குள மரத்தடியில் பிள்ளையார் அம்மன் முருகன் சிலையை வைத்தார்கள். விவசாயிகள் சூரியன் வர முதல் அதிகாலையில் இறைத்த நீர் முழுவதும் பயிர்களால் உறுஞ்சப்பட வழிவகை செய்தார்கள். பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது நீர் ஊறவிட்டே இறைத்தார்கள். இவ்வாறு மிக உன்னதமான நீர் முகாமைத்துவத்தினை நம் முன்னோர்கள் கையாண்டார்கள்.
முற்காலத்தில் வரம்பு கட்டி நீரை சேமித்தார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை. தற்பொழுது வீட்டைச் சுற்றி கொங்கிரீட் போடுகின்றார்கள், காப்பெற் வீதிகள் அமைகின்றார்கள். இது போன்ற செயற்பாடுகளினால் மழை நீர் நிலத்திற்கு கீழ் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்டோம். ஆனாலும் நிலத்தடி நீரை பெருதும் பயன்படுத்தும் அளவை அதிகரித்து விட்டோம். அத்தோடு நீர் மாசடையும் சூழலையும் நாங்கள் உருவாக்கி விட்டோம்.
யாழ்ப்பாணத்தினை பொறுத்தவரை ஆறுகள் இல்லை. நிலத்தடி நீர்தான் பெரும் வரம். வரமாக வாங்கிய நீர் வளத்தினை மனிதனுடைய நடவடிக்கைகளால் நாங்கள் நாசமாக்கி சாபமாக்கி விட்டோம். இது மிகப் பெரிய ஆபத்தான விடயம். நகர பகுதியில் மலக் கழிவுகளாலும், பல பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளாலும் நீர் மாசடைகின்றது, சுன்னாகத்தில் கழிவு எண்ணெய் காரணமாக நீர் மாசடைகின்றது.
கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் உவர் நீரால் நீர் மாசு என பல வழிகளும் நீர் மாசுபடுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலை நீடித்தால் எதிர்வரும் காலங்களில் உவர்த் தன்மை அதிகரித்து யாழ்ப்பாணம் பாலைவனமாகும் சத்தியம் ஏற்படும். இதனை உணர்ந்து நாம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.



