வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சிதைக்கப்பட்டமைக்காக யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்ட ஆணைக்குழு கண்டனம்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் புனித சின்னங்கள் சிதைக்கப்பட்டமைக்காக யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநர் அருட்பணி எஸ்.வி.பி.மங்களராஜா, கண்டனம் வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு சமயத்தவரது பழமைவாய்ந்த மதத்தலத்தை அகற்றுவது அல்லது சிதைப்பது மதநல்லிணக்கத்துக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.
அண்மைக்காலமாக சில இந்து மத வணக்கத்தலங்கள் இவ்வாறு பெரும்பான்மை சமயத்தவரால் அழிக்கப்படுவது வேதனையளிப்பதாயுள்ளது.
இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெறும் போது சட்டத்தையும், ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒன்றும் நடைபெறாதது போல செயற்படாதிருப்பது, நாட்டுக்கும், மக்களுக்கும், நீதிக்கும், சமாதானத்துக்கும் நல்லதல்ல.
இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்ற கூற்றை அடிப்படையாகக்கொண்டு நாட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொன்மைமிக்க இந்து ஆலயங்கள் இருந்தாலும் அவற்றை அகற்றிவிட்டு பௌத்தர்கள் தமது விகாரைகளை அமைக்கலாம் என்ற கூற்றை ஏற்றுக்
கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



