பாணந்துறையில் வர்த்தகர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

பாணந்துறை, பிங்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிட்மன் சில்வா மாவத்தையில் ஜீப்பில் பயணித்த கிரில்லவளை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இன்று காலை தெலிக்கடை கினிமெல்லகஹ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்காக பயன்படுத்தப்பட்ட 08 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் சென்ற நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 48 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம், துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் சந்தேகநபர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பன தொடர்பில் களுத்துறை குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கினிமெல்லகஹ பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.



