இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரிடம் கொள்ளையடித்த இருவர் கைது!

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் அனா புஞ்சிஹேவாவை அச்சுறுத்தி கைவிலங்கிட்டு பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த இரண்டு சந்தேகநபர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் களஞ்சியசாலையில் பணியாற்றும் இரண்டு சிவில் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பெப்ரவரி 15ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், சந்தேகநபர்கள் 200,000 ரூபா பணம், ஆப்பிள் கைத்தொலைபேசி மற்றும் முன்னாள் SLC தலைவரின் கைக்கடிகாரம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் பின்னர் புஞ்சிஹேவாவை தொடர்பு கொண்டு கைத்தொலைபேசியையும் கைக்கடிகாரத்தையும் திருப்பித் தர 250,000 ரூபாவைக் கோரியுள்ளனர்.
புஞ்சிஹேவா சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்
பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர்களை பொரளை மயானத்திற்கு அருகில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்படி, சந்தேகநபர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வந்தபோதே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.



