ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றமா?

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை எதிர்வரும் 31ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவர் பயன்படுத்திய அறையில் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வைத்திருந்தமை இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமா என விசாரிக்க இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிச் செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிய ஜனாதிபதி மாளிகைக்கு 1.67 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் பெறுமதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை எவ்வித மதிப்பீட்டு அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



