அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி: IMF இன் உதவி விரைவில்: மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #Bank #Central Bank #People's Bank #IMF #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி: IMF இன் உதவி விரைவில்: மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அனைத்து முன்நிபந்தனைகளும் தற்போது பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், எனவே வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக வைப்புவசதி வீதம் மற்றும் கடன்வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டிவீதங்கள் 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிக்கப்படுவதாக   மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
 

நாணயச்சபையின் இவ்வருடத்துக்கான இரண்டாவது கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

மத்திய வங்கியின் நாணயச்சபையானது கொள்கை வட்டிவீதங்களை 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. அதன்படி முன்னர் 14.50 ஆகக் காணப்பட்ட துணைநில் வைப்புவசதிவீதம் தற்போது 15.50 சதவீதமாகவும், 15.50 ஆகக் காணப்பட்ட துணைநில் கடன்வசதிவீதம் தற்போது 16.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து மத்திய வங்கியினாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் நாட்டின் பணவீக்கம் தொடர்பில் மதிப்பிடப்பட்டது. அதன்படி 2022 டிசம்பர் மாதமளவில் பணவீக்கம் 70 சதவீதமாக உயர்வடையுமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டிருந்தது. இருப்பினும் அதற்கு மாறாக எதிர்பார்க்கப்பட்ட அளவை விடவும் பணவீக்கம் குறைவடைந்து, தற்போது தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருவதன் காரணமாகக் கொள்கை வட்டிவீதங்களை பெருமளவாலன்றி, வெறுமனே 100 அடிப்படைப்புள்ளிகளால் மாத்திரம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கொள்கை வட்டிவீதங்களுக்கும் சந்தை வட்டிவீதங்களுக்கும் இடையில் தொடர்ந்து இடைவெளியொன்று காணப்படுகின்றது. அதனையும் இக்கொள்கை வட்டிவீத அதிகரிப்பின் ஊடாக சீரமைக்கமுடியுமென எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அனைத்து முன்நிபந்தனைகளையும் நாம் தற்போது பூர்த்திசெய்திருக்கின்றோம். எனவே அவ்வுதவிக்கான சர்வதேச நாணய நிதிய இயக்குனர் சபையின் அனுமதி வெகுவிரைவில் கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றோம்.

மேலும் சுயாதீன மத்திய வங்கி இல்லாத நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்லும் என்பதை சிம்பாவே போன்ற பல்வேறு நிகழ்கால உதாரணங்களின் ஊடாகப் புரிந்துகொள்ளமுடியும். மத்திய வங்கியினால் அனைவராலும் விரும்பத்தக்க தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. மாறாக விரும்பினாலும், விரும்பாவிடினும் சரியான தீர்மானங்களை மாத்திரமே மத்திய வங்கியினால் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!